தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
கரூர் மாவட்டம், குளித்தலை நகரம் மற்றும் பல்வேறு கிராமப்பகுதிகளில் அரசு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது பாட்டில் வாங்கும் மதுப்பிரியர்கள் பலர் பொது இடங்களில் பொதுமக்கள் பயணிக்கும் சாலை மற்றும் தெருக்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர். மது குடிப்பது மட்டுமல்லாமல் பல நேரங்களில் மது பாட்டில்களை அதே இடங்களில் உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் சென்று வரும் பகுதிகளில் மதுபானங்களை குடிப்பவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் நிழற்குடை
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்ஒரத்தை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்லும் வகையில் கீழ் ஓரத்தை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே மழை பெய்யும்போது இந்த நிழற்குடையின் கீழ் நின்று பொதுமக்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முயலும்போது, இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விபத்து அபாயம்
கரூர் மாவட்டம் நொய்யல், மரவபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், ஓலப்பாளையம் ,ஒரம்புபாளையம், சிவகிரி, நல்லிக்கோவில், தாமரைப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சாணி குப்பைகள், கோழிகுப்பைகள், கரும்புகள், மாட்டு தீவனம், கோழி தீவனம், ஜல்லிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை 2 டிப்பர்களில் ஏற்றிக்கொண்டு டிராக்டர்கள் நொய்யல்- பரமத்தி வேலூர் செல்லும் தார் சாலையில் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் டிராக்டரில் 2 டிப்பர்களை இணைத்துக்கொண்டு செல்லும்போது விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிழற்குடை அமைக்கப்படுமா?
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவுட்டுப்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் அரசு டவுன் பஸ்களும், சில தனியார் பஸ்களும் நின்று செல்கின்றன. தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தில் மழை மற்றும் வெயில் காலங்களில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.