தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ் நிறுத்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு தூணின் அடி மட்டத்தில் கான்ங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர் சர்ச் கார்னரில் இருந்து செல்லும் ரத்தினம் சாலையில் சாலையை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பணி விரைந்து முடிக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேவையற்ற வேகத்தடைகள்

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பசுபதிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்வதற்காக தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் குறுக்கே ஒரு குறிப்பிட்ட சிலர் தேவையற்ற முறையில் வேகத்தடையை உயரமாக அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயரமாக வேகத்தடை இருப்பதால் வாகனங்கள் திடீரென செல்லும்போது வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் உயரமான வேகத்தடை இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.

வாகன ஓட்டிகளை துரத்தும் தெருநாய்கள்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், பூங்கா நகர், ஜீவா நகர், என்.ஜி.ஓ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கு திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளை நூலகத்திற்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்பட பலர் வந்து இங்கு உள்ள புத்தகங்களை படித்து தங்களின் அறிவு திறனை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நூலகத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story