தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
முழுமை பெறாத சாலை பணி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலிருந்து பனங்குளம், குளமங்கலம் வழியாக அறந்தாங்கி செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதில் குளமங்கலம் தெற்கு கிராமத்திலிருந்து ஆவணத்தான்கோட்டை வரை அறந்தாங்கி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் பணிகள் நடந்துள்ளது. 90 சதவீதம் முடிந்த சாலை பணியில் மின் கம்பங்களுக்காக பல இடங்களில் சாலை மராமத்து செய்யாமல் உள்ளது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் விடுபட்ட சாலை பணிகள் முழுமையாக நடக்காததால் பெரிய பள்ளங்களாகி வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகிறது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வரும் பொதுமக்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்திற்குள்ளாகி விழுந்துள்ளனர். பள்ளங்கள் இருபதற்கு எச்சரிக்கை பதாகையும் வைக்கப்படவில்லை. ஆகவே சாலை பணியை முழுமையாக பூர்த்தி செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மாஞ்சன்விடுதி ஊராட்சி, மாஞ்சன்விடுதி அம்பேத்கர்நகர் அங்கன்வாடியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடியின் முன் பகுதியில் பள்ளமாக உள்ளதால் மழைபெய்யும்போது இப்பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தொடரும் விபத்துகள்
புதுக்கோட்டை நகருக்கு அறந்தாங்கி, ஆலங்குடி, திருவரங்குளம் வழியாக மேட்டுப்பட்டி மறுப்பினி சாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. புதிதாக போடப்பட்ட இந்த தார் சாலை டி.வி.எஸ். புல் பண்ணை அருகில் சாலையின் நடுவில் நான்கு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்திற்கு இடையூறு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலை ஓரமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதாகைகள் வைப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் முற்றிலுமாக பதாகை வைப்பது தடை செய்யப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் கவனச் சிதறல் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சாலை ஓரங்களில் தொடர்ந்து நிரந்தரமாக பதாகைகள் வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பதாகைகளை பார்த்துக் கொண்டே செல்வதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று காரணமாக பதாகைகள் சாலைகளில் சாய்ந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயனற்ற நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைபட்டி சத்திரம் தர்ஹா அருகே பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து மேற்கூரை இன்றி காணப்படுகிறது. மேலும் இந்த நிழற்குடையில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வெயில், மழை நேரங்களில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இயக்கப்படாத ஆம்புலன்ஸ்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 38 இயக்கப்படுகிறது. இதில் கடந்த ஓராண்டாக 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இரவு நேரத்தில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.