தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகள்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் காற்று அடிக்கும்போது இந்த விளம்பர பதாகைகள் மக்கள் மீது விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பராமரிக்கப்படாத கழிவறைகள்

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து பெரம்பலூர் பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும் ஆங்காங்கே பொதுக்கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பொதுக்கழிவறைகள் சரியான பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மின் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பகுதியில் அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் இந்த மின் தட்டுபாட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுவேட்டக்குடி.

பதற்றத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் மற்றும் ஒன்றியத்தை சேர்ந்தது தேனூர் கிராமம். இந்த கிராமம் தான் பெரம்பலூர் மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் உள்ள கடைசி கிராமமாகும். பெரம்பலூர் மாவட்டத்தின் கடைசி கிராமத்தையும், திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியையும் இணைக்கும் விதத்தில் சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். முதலில் உள்ள தார்ச்சாலை ஆலத்தூர் ஒன்றிய கட்டுப்பாட்டிலும், அடுத்ததாக உள்ள அகலம் குறைந்த காங்கிரீட் சாலை வனத்துறை கட்டுப்பாட்டிலும் வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் பொதுமக்கள் மற்றும் புத்தனாம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நேரு நினைவு கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். சாலை பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பதற்றத்துடனேயே வாகனத்தில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சரவணன் நடேசன், தேனூர்.


Next Story