தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் பகுதியில் இருந்து சடையப்ப சுவாமி கோவில் வழியாக புங்கோடை செல்லும் தார் சாலை நெடுகிலும் மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பியின் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பெரிய வாகனங்கள் மின்கம்பியில் மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமசாமி, வேட்டமங்கலம்.
சீரமைக்கப்படாத சுடுகாடு
கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சுடுகாடு கட்டப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக சுடுகாடு சீரமைக்கப்படாததால் சுடுகாட்டுக்குள் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரேணுகா, குளத்துப்பாளையம்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், கரூர்-ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை புன்னம் சத்திரம் பகுதியில் இருந்து உப்புப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் மற்றும் புன்னம் சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டப் பகுதியில் இருந்து உப்புப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உப்புப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனங்களும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுமதி, புன்னம் சத்திரம், கரூர்.