தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகள்
மணமேல்குடியில் பெரிய குளமாக மஞ்சள் குளம் உள்ளது. இந்த குளத்தில் கிழக்கு புறமாக உள்ள கரையோரத்தில் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் குப்பைகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். இங்கு கொட்டப்படும் கழிவுகள் மஞ்சள்குளம் தண்ணீரில் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தினசரி ஏராளமானோர் குளிக்கும் இந்த குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்றி, இங்கு குப்பைகளை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணமேல்குடி.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் செல்வது இல்லை. சில குளங்கள் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களால் பரப்பளவு குறுகி குளம் எங்கே என தேடும் நிலையில் உள்ளன. குறிப்பாக கறம்பக்குடி தென்னகர் பகுதியில் உள்ள பறையன்குளம் ஆக்கிரமிப்பால் காணாமல் போய் உள்ளது. எனவே கறம்பக்குடி மக்களின் நீர் ஆதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பேரூராட்சி குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்
திருமயம் தாலுகா அலுவலகம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் சுவர்கள் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் வடியும் நிலையில் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களும், பொது மக்களும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இந்த கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பழுதடைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமயம்.