தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமம் சரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி முன்பாக குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைபொத்திக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மலம் கழித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கூடுதல் கட்டணம் வசூல்
அரியலூர் - தஞ்சாவூர் வழித்தடத்தில் அரசு புறநகர் மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் பகுதிக்கு சாத்தமங்கலம், வெற்றியூர் பஸ் நிறுத்தம், கள்ளூர் பாலம், முடிகொண்டான் போன்ற நிறுத்தங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைந்த பட்சம் ரூ.7 ஆகும். ஆனால் ரூ.10 டிக்கெட்டை உடனடியாக கிழித்து கொடுத்து விடுகிறார்கள். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி மாணவர்கள் அச்சம்
அரியலூர் மாவட்டத்தில் 9-க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகிறது. அரியலூர் பகுதியில் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மற்றும் ரெட்டிபாளையம் ஊராட்சியில் மு.புத்தூர் கிராமத்தில் செயல்படும் சுண்ணாம்பு கல் சுரங்கத்திற்கு செல்லும் டிப்பர் லாரிகள் நாகமங்கலம் மற்றும் முனியன் குறிச்சி சாலைகளில் அதிகளவில் வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் விதமாகவும் செல்கிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஒருவித பயத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தரம் உயர்த்தப்படாத ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்றால் நோயாளிகள் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.