'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வெங்காநல்லூர் கிராமம் இ.எஸ்.ஐ.காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாருகால், கழிப்பறை, குடிநீர், குப்பை தொட்டி போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
மணிராஜ், அருப்புக்கோட்டை.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மெயின்பஜார் ரோடு பகுதியில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இப்பகுதியில் சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோஜ், விருதுநகர்.
கழிப்பறை சீரமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பசும்பொன்நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிப்பறை பராமரிப்பற்ற நிலையில் சுகாதாரமற்று காணப்படுவதால் பொதுமக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜதுரை, அவனியாபுரம்.