'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சேதமடைந்த தடுப்புச்சுவர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாயினை கருவேலமரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அங்குள்ள ஊருணியின் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே கருவேலமரங்களை அகற்றவும், தடுப்புச்சுவரை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், அருப்புக்கோட்டை.

வாகன ஓட்டிகள் சிரமம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்லும் சாலையில் அக்ரகாரப்பட்டியில் இருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையின் இருபுறமும் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், சாத்தூர்.

ரேஷன் கடை தேவை

விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் ரேஷன் கடை இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள பாவாலி கிராமத்திற்கு நடந்து சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுவதோடு அரிசி வாங்கி வரும் நாட்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க சந்திரகிரிபுரத்திலேயே ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், விருதுநகர்.

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள பழைய ஜட்கா பாலம், புதிய பாலம் கட்டப்பட்டதிலிருந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. புதிய பாலமும் சேதம் அடைந்து வரும் நிலையில் பழைய ஜட்கா பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே பயன்பாடு இன்றி உள்ள ஜட்கா பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், விருதுநகர்.

பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ்நிறுத்தத்தில் குறிப்பிட்ட சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் 5-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பஸ்கள் நின்று செல்லவும், தடையற்ற குடிநீர் வினியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மதுரை.

சாலை அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேற்கு 66-வது வார்டு மெயின் ரோட்டில் கோச்சடை பகுதியில் உள்ள காளை அம்பலகாரர் தெரு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் தெருவில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடக்க சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து பேவர் பிளாக் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், திருப்பரங்குன்றம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் மேலவெளி வீதி பெரியார் பஸ் நிலையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பிரதான மிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகிலன், மதுரை.

கால்நடைகள் தொல்லை

மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. சாலையில் நடமாடும் கால்நடைகளால் பஸ்களை இயக்க ஓட்டுனர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரு, மதுரை.

கண்மாய் தூர்வாரப்படுமா?

மதுரை மாவட்டம் 66-வது வார்டு மேலக்கால் மெயின்ரோட்டில் கோச்சடை பகுதியில் நீரேற்று நிலையம் அருகில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாயில் கருவேலமரங்கள், செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே கண்மாயில் கருவேலமரங்களை அகற்றி மழை காலங்களில் மழைநீ்ர் தேக்கிவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், கோச்சடை.


Related Tags :
Next Story