'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மத்தியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலை தொட்டிக்கு ஏறக்கூடிய படிகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. விபரீதம் ஏதேனும் நேர்வதற்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம், சத்திரரெட்டியபட்டி.
முட்புதர்களை அகற்ற வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மேலராஜகுலராமன் கிராமம் அய்யனாபுரத்தில் உள்ள பொதுகிணற்றை சுற்றி முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கிணற்றை பயன்படுத்துபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கிணற்றை சுற்றி உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் பொது மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் மழை மற்றும் வெயில் நேரங்களில் ஒதுங்கி நிற்பதற்குகூட இடமில்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனா். எனவே பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரசேகர், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனி, பள்ளப்பட்டி ரோடு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சாலையை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜன், சிவகாசி.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் ஊரில் கழிவுநீர் வாருகால் சேதமடைந்துள்ளதாலும், முறையான சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் கழிவுநீர் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. சுகாதார வளாகங்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கின்றது. எனவே சாலையை சீரமைக்கவும், சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கழிவுநீர் வாருகாலை சீரமைத்து குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
சேதமடைந்த மின்கம்பம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா உடன்பட்டி செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் இந்த வழியே செல்லும் போது பயத்துடனே சென்றுவருகின்றனர். எனவே விபரீதங்கள் எதுவும் நிகழ்வதற்குள் இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, மேலூர்.
ஊருணியில் கலக்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா டி. ஆண்டிபட்டி கிராமத்தில் மயானம் செல்லும் பாதையில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீர் விவசாயத்திற்காகவும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் தற்போது கழிவுநீர் ஊருணியில் கலந்து பயன்படுத்த முடியாத வகையில் மாசடைந்து உள்ளது. ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதவன், வாடிப்பட்டி.
ஆபத்தான நிழற்குடை
திருப்பரங்குன்றம் ஒன்றியம் கரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழைநேரங்களில் மழைநீர் நிழற்குடையின் உள்ளே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.
வியாபாரிகள் அவதி
மதுரை சித்திரைகாரத் தெரு பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை திறப்பதற்கு முன்பாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்தினகுமார், மதுரை.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் ரோட்டில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியே இரவுநேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்து எதுவும் நிகழ்வதற்குள் இந்த பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், திருமங்கலம்.