'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொல்லை தரும் நாய்கள்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், இளையான்குடி.
தேங்கி கிடக்கும் குப்பை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் மக்காத குப்பைகளே அதிகம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதுடன், தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், தேவகோட்டை.
திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் பல முக்கிய தெருக்களில் ஓரமாக ஓடும் சாக்கடை கால்வாய்கள் திறந்த நிலையில் காணப்படுகின்றன. சில நேரங்களில் சாக்கடை கால்வாய்க்குள் நாய்கள், கன்றுக்குட்டிகள் வழுக்கி அதனுள் விழுந்து எழ முடியாமல் தவிக்கின்றன.எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் சாக்கடை கால்வாயை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்தார்த், மானாமதுரை.
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் திறந்த வெளியில் கழிவுநீர் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களால் அவதி அடைகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயை மேல் மூடி போட்டு அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹக்கீம் பாட்ஷா, எஸ்.புதூர்.
கழிவறை வசதி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக கழிவறை உள்ளது. தற்போது இந்த கழிவறை கட்டிடம் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வருகின்ற வெளியூர் பயணிகள் குறிப்பாக பெண்கள் கழிவறைக்கு செல்முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே கழிப்பறை கட்டிடம் மராமத்து பணிகள் நடைபெறும் வேளையில் பெண்களுக்கான தற்காலிக கழிப்பறை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலா, சிங்கம்புணரி.