'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கிடப்பில் குடிநீர் திட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாஸ்தா கோவில் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்ராஜ், முகவூர்.
புதிய பஸ்நிலையம் அமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ்நிலையம் அமைந்துள்ள சாலைப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே மாற்று இடம் ஏற்படுத்தி புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தரமூர்த்தி, சிவகாசி.
விபத்தை குறைக்க சிக்னல்
விருதுநகர் மாவட்டம் மதுரை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் எண்ணற்ற நோயாளிகள் வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்தப்பகுதியில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்க வேண்டும். திருப்பதிராஜன், விருதுநகர்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறன், வத்திராயிருப்பு.
'தினத்தந்தி'க்கு நன்றி
விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்திற்கு செல்லும் பொதுமயான பாதை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இது புகாராக 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இந்த நிலையில் பொது மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பொதுமக்கள், பாவாலி.