'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கையில் இருந்து தேவகோட்டைக்கு மதிய வேளைகளில் குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
நவுசாத்அலி, சிவகங்கை.
குவிந்து கிடக்கும் குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியின் அருகில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்சன், தேவகோட்டை
வேகத்தடை வேண்டும்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- காரைக்குடி செல்லும் சாலையில் தம்பிபட்டி பகுதியில் ஏராளமான வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், திருப்பத்தூர்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ், காரைக்குடி.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியில் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ஊரின் நடுவே செல்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நெடுஞ்சாலையை கடந்துதான் பஸ் நிலையம், பள்ளிக்கூடம், கோவில் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சிக்னல் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காசி, மதகுபட்டி.