'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளி வளாகத்தில் கால்நடைகள்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி சேரந்தை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் வாசலுக்கு கதவு இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்நடைகள் உள்ளே சென்று அசுத்தம் செய்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவாக இந்த பள்ளிக்கு கதவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகவேல், சேரந்தை
சுற்றுச்சுவர் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இங்குள்ள பொதுசொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும் செயல்படுகிறது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், கீழக்கரை,
சேதமடைந்த மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் இறால் பண்ணைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ், திருவாடானை,
குளம் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் மேற்கு தெருவில் உள்ள கோட்டை குளம் பல வருடங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த குளத்தில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்