'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ் வசதி தேவை
மதுரை மாவட்டம் சாப்டூரில் இருந்து உசிலம்பட்டிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் உசிலம்பட்டிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உசிலம்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி 14 -வது வார்டு ராஜீவ் காந்திநகர் பின்புறம் மாயாண்டி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மந்திரகுமார், மதுரை.
குப்பைகளால் சுகாதார கேடு
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் சில குப்பை தொட்டிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கும் குப்பைகளில் சிலர் மேலும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகராஜன், மதுரை.
அபராதம் விதிக்க வேண்டும்
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நவீன்குமார், திருவாலவாயநல்லூர்.
நிறைவடையாத பாலப்பணி
மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி ஊராட்சி தர்மாசனம்பட்டி கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு பணி நிறைவடையாமல் உள்ளது. பாதையில் ஜல்லிக்கற்களை கொட்டி உள்ளனர். இதனால் நடக்க மற்றும் வாகனங்களில் பயணிக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. அத்தியாவசிய வழித்தடம் என்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாலப்பணியை விரைந்து முடித்து பொது போக்குவரத்திற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரம், தர்மாசனம்பட்டி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை 14-வது வார்டு மண்மலைமேடு கல்சந்து கருப்பசாமி கோவில் எதிரில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்கி, மதுரை.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
வாடிப்பட்டி தாலுகா சல்வார்பட்டியில் உள்ள ஊத்துக்கண்மாய் நீர்நிலை பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வாடிப்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பதினாறு கால் மண்டபம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகேஸ்வரன், மதுரை.
சாலை விரிவாக்கம்
மதுரை மாட்டுத்தாவணியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தசாலையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அ.பீர்மைதீன்,மாட்டுத்தாவணி.
தெருவிளக்கு வசதி வேண்டும்
சோழவந்தான் திருவாலவாயநல்லூர் மற்றும் நகரிகாலனியில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவுநேரங்களில் அவ்வப்போது இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி கொள்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணி, திருவாலவாயநல்லூர்.