தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
மதுரை பாண்டிய வேளாளர் தெரு, முத்து மேஸ்திரி சந்து ஆகிய தெருக்களில் நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளையில் வாகனஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுல் ஹமீது, மதுரை.
நடைமேடை சீரமைக்கப்படுமா?
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மீனாட்சி பஜார்வரை செல்லும் சாலையில் உள்ள நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடைமேடையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பாலா, மதுரை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை வில்லாபுரம் டி.என்.எச்.பி. காலனியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வில்லாபுரம்.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் எஸ்.கல்லம்பட்டியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் கோழி, ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கடித்து காயப்படுத்துகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுமா?
முத்துபாண்டி, எஸ்.கல்லம்பட்டி.
சேதமடைந்த சாக்கடை மூடி
மதுரை ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இது ஏராளமானோர் பயணிக்கும் அத்தியாவசிய சாலை என்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
மனோகரன், ஆரப்பாளையம்.