தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய மின்கம்பம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றிலிருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் மின்கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே மழைக்காலத்திற்கு முன்பு மின்கம்பங்களை மாற்றி அமைக்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மல்லாங்கிணறு.
சேதமான கட்டிடங்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுமயானம் மற்றும் சமுதாயக்கூடம் சேதமடைந்த நிலையில் கட்டிடங்கள் விரிசலடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை சரியான முறையில் பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்புசாமி, புதுக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சுரங்க ெரயில் பாதை வழியாக செல்லும் முக்கிய சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடியானது சேதமடைந்துள்ளது. இதில் இருந்து கழிவுநீரானது வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டியில் உள்ள ரேஷன்கடை கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன்கடையை சீரமைக்க வேண்டும்.
எல்ஜின், தாதம்பட்டி.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே மண்குண்டாம்பட்டி பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் இந்த கம்பம் உள்ளதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
நசீர், மண்குண்டாம்பட்டி.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகரின் மையப்பகுதியில் மெயின்பஜார் உள்ளது. இந்த பஜாரில் தினமும் எண்ணற்ற வியாபாரிகள், பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள சாலை குறுகிய நிலையில் உள்ளதால் வாகனங்கள் சென்று வர முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதிராஜன், விருதுநகர்.