தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
திறக்கப்படாத சுகாதார வளாகம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி அண்ணா காலனியில் பெண்களுக்கென தனியாக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இது திறக்கப்படாமல் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், தாயில்பட்டி.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவில் நாய்கள் குரைத்து கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். கிருஷ்ணன், ராஜபாளையம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகரில் மதுரை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் மெயின் பஜாரில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி, விருதுநகர்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்களபுரம் செல்லும் சாலையில் அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெரு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த பின்னர் குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடிவதில்லை. மேலும் குழந்தைகளும் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளதால் கால்வாய் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள வேண்டாங்குளம் கண்மாயை கருவேல மரங்கள் முற்றிலும் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கண்மாயில் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.