தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்வசதி தேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மம்சாபுரத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள், மாணவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ராஜபாளையம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளம் பஞ்சாயத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிநிற்கும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரமநாயகம், சிவகாசி.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா முத்துசாமிபுரத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தான இந்த மின்கம்பமானது அருகில் உள்ள வீட்டின் மீது விழும்படி சாய்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன், முத்துசாமிபுரம்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின் வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த 6 கவுண்டர்கள் செயல்பட்டுவந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்துகின்ற நிலை உள்ளது. எனவே இந்த அலுவலகத்தில் அனைத்து கவுண்டரிலும் கட்டணம் வசூல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, சிவகாசி.
மண் திருட்டு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்ராஜ், தேவதானம்.