தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஒளிராத தெருவிளக்குகள்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அழகாபுரி அருகே எம்.புதுக்குளம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவுநேரத்தில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஒளிராத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அழகாபுரி.
சேதமடைந்த பூங்கா
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணை வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கவனிப்பாரின்றி உள்ளது. இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், வத்திராயிருப்பு.
கழிவறை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் குன்னூர் ராஜீவ்காலனி 1-வது தெருவில் பொதுகழிவறை வசதி கிடையாது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணி, குன்னூர்.
அறிவிப்பு பலகை தேவை
விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி, இனாம் கரிசல்குளத்தில் உள்ள ரெயில்வே கேட் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனஓட்டிகளை மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தும் அறிவிப்பு பலகை ஏதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் சிரமப்படுகிறார்கள். ஆதலால் மேற்கண்ட பகுதியில் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யம்பெருமாள், வன்னியம்பட்டி.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் சத்தியமூர்த்தி ரோட்டின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நரேன், விருதுநகர்.