தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சுற்றுச்சுவர்
விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் மேற்கு பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மின்வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், விருதுநகர்.
விபத்து அபாயம்
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்முருகன், தாயில்பட்டி.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் வடக்கு பகுதியில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கண்மாய் நீர் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், விவசாயம் போன்ற தொழில் வளங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ்வரன், சுந்தரபாண்டியம்.
சாலை வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. மண் சாலையாக காணப்படுவதால் வழிநெடுகிழும் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வழித்தடத்தில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெஸ்வின் பாண்டியன், ெரங்கப்பநாயக்கன்பட்டி.
பஸ் இயக்கம் நீட்டிக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கீழப்பொட்டல்பட்டிக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாள்தேவன்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்சை கீழப்பொட்டல்பட்டி வரை இயக்கினால் இப்பகுதியில் இருந்து செல்லும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். எனவே பஸ் இயக்கத்தை நீட்டிப்பு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெரியசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.