தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகரில் இருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராஜ், விருதுநகர்.

சேதமடைந்த நிழற்குடை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆர்.கல்லுமடம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், திருச்சுழி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண்மேவி காணப்படுகிறது. இதனால் சிறிய மழை பெய்தால் கூட இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிவாணன், அருப்புக்கோட்டை.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் செல்லும் வழி காமராஜர் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகாசி.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ்நிறுத்தத்தில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன், சிவகாசி.

இருக்கை இல்லாத நிழற்குடை

விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இருக்கை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூா்த்தி, விருதுநகர்.

சேதமடைந்த குடிநீர்தொட்டி

விருதுநகர் மாவட்டம் இலுப்பைகுளம் பஞ்சாயத்து இருவர்குளம் கிராமத்தில் குடிநீர் சேமிக்கும் தொட்டி சேதமடைந்து உள்ளது. இந்த நீரை இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே நீர்தேக்க தொட்டியை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாலிங்கம், இலுப்பைகுளம்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் உட்கடை கிராமம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு காலனியில் உள்ள கிணற்றில் மரச்செடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பராமரிப்பின்றி உள்ள இந்த கிணற்றை சரிசெய்து சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.

பால்பாண்டி, ஆமத்தூர்.

வேகத்தடை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவிகள் சாலையை இருபுறமும் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து மாணவிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரியாபட்டி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் மாவுத்து விலக்கு மெயின் ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆதலால் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.


Next Story