தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள வாருகாலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் அருகில் அரசு பள்ளியும், மாணவர்கள் விடுதியும் உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வாருகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ரோடு ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நவநீதன், விருதுநகர்.
சாலையின் நடுவே மின்கம்பங்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முத்துமாரியம்மன் காலனியில் உள்ள சில தெருப்பகுதிகளில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமரன், சிவகாசி.
வேகத்தடை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்பிரமணி, தாயில்பட்டி.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
விருதுநகர் பகுதியில் உள்ள கவுசிகமா ஆற்றில் கழிவுநீர் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் இந்த ஆறு மாசடையும் நிலையில் உள்ளது. மேலும் கழிவுநீர் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி உள்ளது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகவேல், விருதுநகர்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. மேலும் அதே வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் ஏதுமின்றி உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு சிறுவர் பூங்காவிற்கு தேவையான உபகரணங்களை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணன், விருதுநகர்.
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில் செல்லையாபுரம் செல்லும் வழியில் காய்கறிகழிவுகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. இதனால் காய்கறிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ேவலவன், ஏழாயிரம்பண்ணை.
மாணவர்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பள்ளியிலிருந்து மெயின் ரோட்டை இணைக்கும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
தேங்கும் மழைநீர்
விருதுநகர் மாவட்டம் சுத்தமடம் ஊராட்சி கஞ்சம்பட்டி கிராமத்தில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதுடன் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தங்களது வாகனங்களை இயக்கவும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சுத்தமடம்.