தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செக்போஸ்ட் அரசு கலைக் கல்லூரி அருகில் 20க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு உபயோகமற்ற சாலையாக காட்சியளிக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையின் காரணமாகவும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த கூடிய இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், மேலூர்.
சுகாதார சீர்கேடு
மதுரை யானைமலை நரசிங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் சாலை ஓரத்தில் குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. சிலர் குப்பையில் தீயை வைத்து விட்டு செல்வதால் வாகனங்களில் அந்த வழியே செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், யானைமலை நரசிங்கம்.
தெரு நாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர்நகர்பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகளை துரத்துகிறது. எனவே பொதுமக்கைள அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், மதுரை.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை மாநகராட்சி 42-வது வார்டு பீ.பி. குளம் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பீ.பி.குளம்.
காற்று மாசுபாடு
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அவ்வையார் தெரு, நரிமேடு மெயின் ரோடு இன்னும் சில தெருக்களில் தூசி அதிகமாக உள்ளது.இதனால் காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் உடல்நலன் பாதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சீரமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
என்.சுரேஷ், நரிமேடு.