தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கண்மாய்கள் தூர்வாரப்படுமா?
மதுரை மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்த நிலையில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அழகர்கோவில் ரோடு கொடிக்குளம் கண்மாய் உள்பட மாவட்டத்தின் அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரங்களை சேமித்து விவசாயம் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், மதுரை.
தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
மதுரை மாவட்டம் கனகவேல் காலனி மெயின்ரோடு கழிவுநீர் செல்லும் தரைபாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தரைபாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், மதுரை.
ஆக்கிரமிப்பு
மதுரை மாநகர் 21-வது வார்டு பெத்தானியாபுரம் சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் நடக்க பாதையின்றி பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், பெத்தானியாபுரம்.
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பங்கா ரோடு அருகில் குடியிருப்பு பகுதியில் நாய்கள், பன்றிகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலி அக்பர், மேலூர்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
மதுரை மேலூர் நகைகடை பஜார் பெரியகடைவீதி சந்திப்பு அருகில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்குகின்றது. இதனால் வானகஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் செல்ல வழியின்றி சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோவன், மதுரை.