`தினத்தந்தி' செய்தி எதிரொலி: திருப்பரங்குன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடக்கம்


`தினத்தந்தி' செய்தி எதிரொலியால் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கியது.

மதுரை

திருப்பரங்குன்றம்,


`தினத்தந்தி' செய்தி எதிரொலியால் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கியது.

சர்வீஸ் ரோடு

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 2011-2012-ம் ஆண்டில் ரூ.22 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கீழ் பகுதியின் இருபுறமும் தலா 4½ மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் ரோடு போட திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் ஒரு பகுதி மட்டும் சர்வீஸ் ரோடு போடப்பட்டது. மற்றொரு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வீஸ்ரோடு போடப்படாத நிலையே நீடித்து வந்தது.

பாலத்தின் கீழ் பகுதியின் இடமானது 24 பேருக்கு உரியதாகும். எனவே, அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் சர்வீஸ் ரோடு அமைப்பதில் இழுபறி தொடர்ந்தது. அதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பாதசாரிகளும் எளிதாக நகருக்குள் சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

`தினத்தந்தி' செய்தி எதிரொலி

சிலசமயங்களில் பாலத்தின் மேல்புறத்தில் இருந்து நகருக்கு வரக்கூடிய வாகன ஓட்டிகளும், நகருக்குள் இருந்து வெளியேறி பாலத்தை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளும் பாலத்தின் கீழ்பகுதியான குறுகிய சந்திப்பான இடத்தில் நேருக்கு நேராக மோதும் நிலையும் இருந்்தது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக முதற்கட்டமாக இடத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

நபார்டு மற்றும் கிராம சாலை பிரிவு அதிகாரிகள் சர்வீஸ் ரோடு அமைக்கும் இடத்தினை நேரடியாக ஆய்வு செய்தனர். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணி 2 வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வீஸ் ரோடு முழுமையாக அமைக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story