'தினத்தந்தி' செய்தி எதிரொலி: திருப்பரங்குன்றம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அரசு பஸ் வசதி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், மற்றும் மடப்புரம் பத்ர காளியம்மன் கோவில், பாண்டி கோவிலுக்கு சென்று வருவதில் விருப்பமாக உள்ளனர். ஆனால் திருப்பரங் குன்றத்தில் இருந்து உரிய கோவில் தலங்களுக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாத குறையால் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்து மற்றொரு பஸ்சில் ஏறிச்செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து "தினத்தந்தி "யில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு திருப்பரங்குன்றம் முருகன்கோவில் துணை கமிஷனர் சுரேஷ், திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர், இயக்க மேலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை போக்குவரத்து துறை (கிழக்கு) கோட்ட மேலாளர் தயாள கிருஷ்ணன் தலைமை தாங்கி பஸ்சை தொடங்கி வைத்தார். இதனை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்றதோடு தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள் திருப்பரங்குன்றம் - அழகர்கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், பாண்டி கோவிலுக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.