திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டுகளில்170 டன் பூக்கள் விற்பனை


திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டுகளில்170 டன் பூக்கள் விற்பனை
x
தினத்தந்தி 25 Aug 2023 1:15 AM IST (Updated: 25 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஓணம், வரலட்சுமி விரதம் எதிரொலியாக திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டுகளில் ஒரே நாளில் 170 டன் பூக்கள் விற்றன. பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

திண்டுக்கல்

ஓணம்-வரலட்சுமி விரதம்

கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மொத்தம் 10 நாட்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பே ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஓணம் பண்டிகையில் வழிபாடு, அத்தப்பூ கோலம் ஆகியவற்றில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது.

இதற்காக திண்டுக்கல்லில் இருந்து கடந்த வாரத்தில் இருந்தே பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், அதிக அளவில் பூக்கள் அனுப்பப்படுகின்றன. அதன்படி நேற்றும் கேரளாவுக்கு பூக்கள் வாங்கி அனுப்ப வியாபாரிகள் வந்தனர். இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதம் ஆகும்.

70 டன் பூக்கள் விற்பனை

இதையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் வீடுகளிலும் பூஜைகள் நடத்துவார்கள். இதனால் வரலட்சுமி விரத வழிபாட்டுக்கு பூக்களை வாங்குவதற்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

ஒரே நேரத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்ததால் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. அதை அறிந்து விவசாயிகளும் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்திருந்தனர். திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டத்தில் இருந்தும் பூக்கள் வந்தன. இதனால் நேற்று ஒரேநாளில் மட்டும் 70 டன் பூக்கள் விற்பனை ஆனது.

விலை உயர்வு

அதேநேரம் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கியதால் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்படி மல்லிகைபூ கிலோ ரூ.1,100-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.450-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், செண்டுமல்லி மற்றும் வாடாமல்லி தலா ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், பட்டன்ரோஸ் ரூ.200-க்கும் விற்பனை ஆனது.

நிலக்கோட்டை

அதேபோல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் நிலக்கோட்டையில் நேற்றைய தினம் 100 டன் பூக்கள் விற்பனை ஆகின. அதோடு பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிலக்கோட்டையில் நேற்றைய தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,300-க்கும், முல்லைப்பூ ரூ.450-க்கும், ஜாதிப்பூ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.450-க்கும், பட்டன் ரோஸ் ரூ.250-க்கும், சாதாரண ரோஜா ரூ.150-க்கும் விற்றது. திண்டுக்கல், நிலக்கோட்டையில் நேற்று ஒரே நாளில் 170 டன் பூக்கள் விற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story