திண்டுக்கல் ரெயில் பாதையில் போலீசார் தீவிர ரோந்து பணி
திருப்பத்தூரில் ரெயில் சிக்னல் பெட்டி உடைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக திண்டுக்கல்லில் ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிக்னல் பெட்டி உடைப்பு
ஒடிசா மாநிலத்தில் ரெயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் பெட்டியின் மூடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரெயில் நிலைய பகுதிகளில் சிக்னல் பெட்டிகள், தானியங்கி டிராக் மாற்றும் கருவி அமைந்துள்ள இடங்களில் ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி
அதன்படி திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் ரெயில் நிலைய தண்டவாள பகுதி, திண்டுக்கல்-சென்னை வழித்தட தண்டவாள பகுதி, திண்டுக்கல்-மதுரை வழித்தட தண்டவாள பகுதி ஆகியவற்றில் சிக்னல் பெட்டிகள், தானியங்கி டிராக் மாற்றும் கருவிகள் அமைந்துள்ள இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி மேற்பார்வையில் இந்த ரோந்து பணி நடந்து வருகிறது. மேலும் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்ப்பது உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க தண்டவாள பகுதி, சிக்னல் பெட்டி, டிராக் மாற்றும் கருவி ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.