திண்டுக்கல் ரெயில் நிலையத்தில்வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
சுதந்திர தினம்
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சோதனை
மேலும் மோப்பநாய் அசின் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுன்ட்டர், 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இதுமட்டுமின்றி ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பார்சல்கள், சரக்குகள் ஆகியவை பலத்த சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.
மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்ட பிறகே ரெயில் நிலையத்துக்குள் எடுத்துச்செல்ல போலீசார் அனுமதித்தனர்.
சுழற்சி முறையில் கண்காணிப்பு
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் கூறுகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை காலை, மாலை நேரங்களில் தீவிர சோதனை நடத்தப்படும்.
திண்டுக்கல் ரெயில் நிலையம் மட்டுமின்றி பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் திருச்சி வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் முடியும் வரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.