திண்டிவனம் தாசில்தாரின் ஜீப் மோதி பெண் பலி
திண்டிவனம் தாசில்தாரின் ஜீப் மோதி பெண் பலியானார்.
விக்கிரவாண்டி:
சென்னை சைதாப்பேட்டை கிருஷ்ணபிள்ளை தோட்டம் ஜோன்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்(வயது 54). மின்வாரிய ஊழியர். இவரது தங்கையின் மகள் நிச்சயதார்த்த விழா, விழுப்புரத்தில் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக கோவிந்தராஜ், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பத்மபிரியா(40), மகள் மவுலிகா(3) ஆகியோருடன் விழுப்புரத்துக்கு புறப்பட்டார். அதே சமயத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், தனது அலுவலக ஜீப்பில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டார்.
தாசில்தாரின் ஜீப் மோதி பலி
விக்கிரவாண்டி புறவழிச்சாலை பஸ் நிலையம் பின்புறம் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரியை கோவிந்தராஜ் முந்தி செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த திண்டிவனம் தாசில்தாரின் ஜீப், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதி்ல் பத்மபிரியா, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். அவர் மீது ஜீப், ஏறி இறங்கியதில் பத்மபிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோவிந்தராஜ், மவுலிகா ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மபிரியாவின் உடலும், பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.
விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.