காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் ஓராண்டு தொழிற்பிரிவுகளான வெல்டர், தொழிற்சாலை வர்ணம் பூசுபவர், போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதில் சேர விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும். தவிர ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.