வடமதுரை, பாளையம் பகுதிகளில் பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு
வடமதுரை, பாளையம் பகுதிகளில் பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் வடமதுரை மந்தைகுளத்தை தூர்வாரி, அதனை சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி ரூ.4½ கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தற்போது குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் முடிந்துவிட்டது. மேலும் மின் விளக்குகள், இருக்கைகள் பொருத்துதல் மற்றும் பாதுகாப்பு அறை கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை, சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலைமான் திருமுடிகாரி நேற்று முன்தினம் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், மாவட்ட உதவி செயற்பொறியாளர் இசக்கி, வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன், செயல் அலுவலர் கல்பனா தேவி, 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆர்.கொல்லப்பட்டியில் சேதமடைந்த தரைப்பாலம் மற்றும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலையூர் பெரியகுளத்தை தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி, தொகுப்பு பொறியாளர் மாயன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.