பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தை இயக்குனர் ஆய்வு
பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளா் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆகியவையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவன் ஆகியவை கணக்கிடப்படும் முறை மற்றும் பரிசோதனை முடிவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர் விதை முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன், கணக்கிடும் முறைகள் மற்றும் மறு பரிசோதனை மாதிரிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். விதை பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். விதை மாதிரிகளை சரியான முறையில் பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் முடிவுகள் கிடைக்க செய்யுமாறு இயக்குனர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் விதைச்சான்றளிப்பு மற்றும் விதை ஆய்வு பணிகளையும் மேற்கொண்டார். பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தில், 2022-23-ம் நிதியாண்டில் இதுவரை 492 சான்று விதை மாதிரிகள், 1,021 ஆய்வாளா் விதை மாதிரிகள் மற்றும் 273 பணி விதை மாதிரிகள் என மொத்தம் 1,776 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 118 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
ஆய்வின் போது கரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் மாயக்கண்ணன், திருச்சி விதை பரிசோதனை அலுவலா் (பொறுப்பு) மனோன்மணி, பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெய்வீகன் மற்றும் வேளாண்மை அலுவலா்கள் உடனிருந்தனர்.