காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை உறுதி


காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை உறுதி
x

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை உறுதி சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு.

சென்னை,

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த எண்ணி 7 நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்காக பி.வி.பி. கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கடன் பெற்றுள்ளனர்.

அந்த கடன் தொகையில் ரூ.35 லட்சத்துக்கு அவர்கள் காசோலை கொடுத்துள்ளனர். அந்த காசோலையை பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் வங்கியில் செலுத்தியபோது லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து பி.வி.பி. நிறுவனம் தரப்பில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு, இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதை எதிர்த்து லிங்குசாமியும், அவரது சகோதரரும் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு விதித்த 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.


Next Story