நீரின்றி காய்ந்த குறுவை நெற்பயிர்களை வேளாண்துறை இயக்குனர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் நீரின்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் நீரின்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காய்ந்த குறுவை நெற்பயிர்கள்
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 61 ஆயிரத்து 268 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மேட்டுர் அணையின் நீர்வரத்து குறைவாக உள்ளது. மேலும் கடந்த மாதம் இயல்பான மழையை விட குறைவான (34.7 மி.மீ) மழை பெய்தது.
இதனால் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 295 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரானது தண்ணீரின்றி காய்ந்தது.
இயக்குனர் ஆய்வு
அவ்வாறு காய்ந்த நெற்பயிர்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருமருகல் வட்டாரத்தில் தெற்குலேரி மற்றும் மாதிரிமங்கலம் தரிசுவேலி, கீழ்வேளுர் தாலுகாவில் தென்மருதூர், ஆதமங்கலம், கொடியாலத்தூர், தலைஞாயிறு தாலுகாவில் கொளப்பாடு, மணக்குடி, ஆய்மூர், நீர்முளை கிராமத்திலும், கீழையூர் தாலுகாவில் ஈசனூர், திருவாய்மூர், எட்டுக்குடி கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் வடமழை மணக்காடு, செட்டிப்புலம், பிராந்தியங்கரை கிராமத்திலும், நாகப்பட்டினம் தாலுகாவில் பாப்பாகோவில், குருவாடி மற்றும் மாதிரிமங்கலம் கிராமத்திலும் தண்ணீரின்றி காய்ந்த நிலையில் உள்ள குறுவை பயிர்களை வேளாண்மை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளிடம் குறைகள்
தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, சென்னை- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண்மை இணை இயக்குனர் முரளிதரன், வேளாண்மை இணை இயக்குனர் (பொ) தேவேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.