டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு


டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு திரளான பக்தர்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள். மேலும், இங்கு சஷ்டியப்தபூர்த்தி(அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டைரக்டரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவரது மனைவி ஷோபா ஆகியோர் நேற்று இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவிலின் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.









Next Story