அசுத்தமான நிலையில் புதுஆற்றங்கரை நடைபாதை
எச்சரிக்கை பதாகை காட்சி பொருளாக இருப்பதால் அசுத்தமான நிலையில் உள்ள புதுஆற்றங்கரை நடைபாதையை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்;
எச்சரிக்கை பதாகை காட்சி பொருளாக இருப்பதால் அசுத்தமான நிலையில் உள்ள புதுஆற்றங்கரை நடைபாதையை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜராஜசோழன்
தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் என்னும் புதுஆறு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. தஞ்சை காந்திஜிசாலையில் இருந்து எம்.கே. மூப்பனார் சாலை பாலம் வரை புதுஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடைபயணம் செல்வோர் ஆங்காங்கே அமருவதற்கு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இந்த நடைபாதைக்கு மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் புதுஆற்றங்கரை படித்துறை மற்றும் நடைபாதையில் அமர்ந்து ஏராளமானோர் மது அருந்தினர். இதனால் ஒரு கரையில் உள்ள நடைபாதை அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மறுகரையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் பிள்ளையார்கோவில் பின்புறம் நடைபாதை இடிந்து காணப்படுகிறது.
கரிகால்சோழன்
இந்த நடைபாதையை போல் காந்திஜிபாலத்தில் இருந்து பெரியகோவில் அருகே உள்ள புதுஆற்றுப்பாலம் வரை ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு பேரரசன் கரிகால்சோழன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலக பின்புற பகுதி, பழைய கலெக்டர் அலுவலக பின்புற பகுதி வழியாகவும், ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பின்புற பகுதி வழியாகவும் மின் விளக்குகள் வசதிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டது.இதற்காக ரூ.1 கோடியே 28 லட்சம் செலவு செய்யப்பட்டது. இந்த நடைபாதை கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. பல ஆண்டுகள் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பியிலான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முற்றிலும் தவிர்த்த மக்கள்
ஆங்காங்கே மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் ஆற்று தண்ணீரை ரசித்து கொண்டே நடை பயிற்சி போகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் வரி பணத்தால் போடப்பட்ட இந்த நடைபாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபாதையில் பலர், சிறுநீர் கழித்துவிட்டு செல்வதுடன் சிலர் இயற்கை உபாதைகளையும் கழித்துவிடுகின்றனர்.இதனால் அசுத்தமான நிலையில் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அந்த வழியாக செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டனர். பேரரசன் கரிகால்சோழன் நடைபாதை, மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்டதுறையினர் முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.