10 இடங்களில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி
நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செயல்விளக்க பயிற்சி
நாகை மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாநில அளவிலான மாதிரி செயல் விளக்க பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சாரத்துறை, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), அரசு போக்குவரத்துத்துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.
10 இடங்களில் 1-ந்தேதி நடக்கிறது
இதன் ஒரு பகுதியாக வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 1.30 மணி வரை நாகை வட்டம், பாப்பாகோவில் ஊராட்சியில் அந்தணப்பேட்டை பெருமாள் கோவில் குளம் அருகிலும், கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில் துளுக்கன் குளம் எதிரிலும் பயிற்சி நடக்கிறது.
மேலும் கீழ்வேளுர் வட்டம், ஆணைமங்கலம், ஓர்குடி அய்யனார் கோவில் குளம் அருகிலும், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள குளம் அருகிலும், வேதாரண்யம் வட்டம், ஓரடியம்புலம், தாமரைக்குளம், தலைஞாயிறு 3-ம் சேத்தி ஆகிய 5 இடங்களிலும் பயிற்சி நடக்கிறது.
அச்சப்பட வேண்டாம்
பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இப்பயிற்சி நடத்தப்படவுள்ளதால், இந்நிகழ்ச்சியின் போது அரசு வாகனம் மூலம் பேரிடர் தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும். இதை பொதுமக்கள் உண்மை என கருதி அச்சப்பட வேண்டாம். இந்த பயிற்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.