ஒரே நாளில் 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


ஒரே நாளில் 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சோழன்திட்டை தடுப்பணையில் நடந்த ஒத்திகையை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சோழன்திட்டை தடுப்பணையில் நடந்த ஒத்திகையை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

ஒத்திகை நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதே போல குமரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புக்குழு சார்பில் சுசீந்திரம் சோழன்திட்டை தடுப்பணை, திருப்பதிசாரம், இரணியல் வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் பள்ளிக்கல் ஆகிய 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

சோழன்திட்டை தடுப்பணையில் நடந்த நிகழ்ச்சியில், மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவரை எப்படி மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் காட்டப்பட்டது. அதன்படி அணைக்கட்டில் குளிக்க வருபவர்கள் தண்ணீரில் தத்தளிப்பது போலவும் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுப்பது போலவும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகும் மூலம் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

சோழன்திட்டை தடுப்பணையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டது. குமரி மாவட்டத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அவசர எண்கள்

பேரிடர் காலங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பேரிடர் கால விழிப்புணர்வு ஏற்படுத்திட முன்வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-1077, 04652-231077 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்பணி குழு உதவி கமாண்டன்ட் பிரவீன் எஸ்.பிரசாத் (அரக்கோணம்), 23-வது மராட்டிய லைட் காலாட்படை கேப்டன் பரத் வம்சி (திருவனந்தபுரம்), நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், சுசீந்திரம் செயல் அலுவலர் கமலேஷ்வரி, கன்னியாகுமரி தீயணைப்பு அதிகாரி ஆரோக்கியதாஸ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசியா, அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்கீஸ் ராஜா, மொபைல் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story