தோல் தொழிற்சாலை கழிவுகளை திறந்து விடுவதை தடுக்க வேண்டும்
ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தோல் தொழிற்சாலை கழிவுகளை திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வனஅலுவலர் கலாநிதி, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) டாக்டர் பிரசன்னகுமார், வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
மும்முனை மின்சாரம்
விவசாயி: வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆடி மாதத்தில் என்னென்ன பயிர்கள் பயிரிட வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். ஆடி மாதத்தில் தேடி விதை என்று முன்னோர்கள் கூறி உள்ளார். எனவே அந்த மாதத்தில் பயிரிட வேண்டிய பயிர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகொண்டா, ஊசூர் பகுதிகளில் குறைந்தளவு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதனால் மின்மோட்டார்கள் பழுது ஏற்படுகிறது. விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தற்போது எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. அதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை.
மின்வாரிய அலுவலர்: கோடைக்காலம் என்பதால் தற்போது 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பகுதி வாரியாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. எந்த நேரத்தில் அந்த மின்சாரம் வழங்குப்படுகிறது என்பது குறித்து விவரம் தெரிவிக்கப்படும்.
தொழிற்சாலை கழிவுகள்
விவசாயி: மணிலா பயிர்களை சேதம் செய்யும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தழைச்செடிகள், தைலம், நொச்சி மரக்கன்றுகள் வழங்க வேண்டும்.
வன அலுவலர்: தைல மரம் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் தற்போது வழங்கப்படவில்லை. தழைச்செடிகள் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயி: மாதனூர் பாலாற்று பாலம் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. பேரணாம்பட்டு பகுதியில் ஆறு, ஏரிகளில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்: மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றும் நடைமுறை குறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைகளையொட்டி குப்பைகள்...
விவசாயி: ரேஷன்கடைகளில் கோதுமை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த அளவில் வழங்கப்படுகிறது. அதனால் குடும்ப அட்டைதாரர்கள் கடை விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். ஆறு, ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நீர்நிலைகளையொட்டி குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். இயற்கை ஏரிகளை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியா, உதவி வனபாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.