மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்


மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
x

தியாகதுருகம் அருகே மீன்பிடிப்பதற்காக ஏரியில் இருந்து இரவு நேரத்தில் வீணாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் மீன் வளர்த்து பிடிக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. இதையடுத்து ஏரியை குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றார்.

இந்தநிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பல்லகச்சேரி ஏரியிலிருந்து பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால், அங்கு மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

கரும்பு பயிர்கள் பாதிப்பு

இதையடுத்து மீன்பிடிப்பதற்காக ஏரியில் உள்ள ஒரு மதகு மற்றும் புதிதாக மதகு அமைப்பதற்காக அங்கு தோண்டப்பட்ட பள்ளம் வழியாகவும் இரவு நேரத்தில் தண்ணீரை வீணாக வெளியேற்றி மீன்கள் பிடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் விவசாய பயர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் தேவையின்றி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது அங்குள்ள கரும்பு பயிர்களுக்கு புகுந்து வருகிறது. இதனால் கரும்பு பயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story