கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிப்பு


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் 2½ மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் 2½ மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும் தினமும் கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். அதே சமயம் கன்னியாகுமரிக்கு செல்லும் பயணிகள் மட்டும் ரெயிலில் அமர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் ரெயில் என்ஜினில் இருந்து 2-வது மற்றும் 3-வது பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்து சேதமடைந்து இருந்ததை ரெயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து வந்து ரெயில் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சீரமைப்பு பணி தாமதமானது. பணி எப்போது முடிவடையும் என்ற அறிவிப்பும் முறைப்படி தெரிவிக்கப்படாததால் அந்த ரெயிலிலேயே காத்திருந்த பயணிகள் விரக்தி அடைந்தனர். தொடர்ந்து ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய பயணிகள் பலர் பஸ்சில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்றனர்.

2½ மணி நேரம் தாமதம்

இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சீரமைப்பு பணி நடந்தது. இறுதியில் சேதமடைந்த கொக்கி இணைப்பை ஊழியர்கள் சரி செய்தனர்.

பின்னர் அந்த ரெயில் காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கி சென்றது. அதாவது சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக சென்றது. இதனால் அதில் பயணம் செய்த சில பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ரெயில் பெட்டிகளின் இணைப்பு சேதமடைந்து துண்டான சம்பவம் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ரெயில்கள் தாமதமாக இயக்கம்

மேலும் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

ரெயிலின் இணைப்பு பகுதி சேதமடைந்து துண்டிக்கப்பட்டு இருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். பின்னர் இணைப்பை சரி செய்வதற்காக ரெயில் என்ஜினில் இருந்து அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தால் நேற்று காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 8.15 மணிக்கு புறப்பட்டது. இதேபோல காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் 25 நிமிடங்கள் தாமதமாக காலை 8.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அதே சமயம் மற்ற ரெயில்கள் வேறு பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில் நடுவழியில் இதேபோன்று சேதமடைந்து நின்றிருந்தால் அனைத்து பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பார்கள். மேலும் சென்னைக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story