12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு


12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்ெவட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்ெவட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வணிகம்

நாட்டறம்பள்ளி பங்களாமேட்டு பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கமலநாதன் கொடுத்த தகவலின்பேரில், பங்களாமேட்டு பகுதியில் உள்ள கல்வெட்டை எங்கள் ஆய்வுக்குழு ஆய்வு செய்தது. 4.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை நிற பலகைக் கல்லில் இக்கல்வெட்டு வாசகம் அமைந்துள்ளது. ஸ்வத்திஸ்ரீ என்று மங்கலமாக இக்கல்வெட்டானது தொடங்குகிறது. ஸ்வஸ்திஸ்ரீ, அத்தியூர் க, ர-தரிக்கு, பெபரியனர, ம கண்ட சித்திர, றுகால் என 7 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆற்றின் வழியாக ஏரிக்குச் செல்லும் கால்வாயை சீர்ப்படுத்தி தந்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

அத்தியூர் என்று கல்வெட்டில் வருகிறது. இன்றைக்கும் இதே பெயரில் புதுப்பேட்டைக்கு அருகே ஒரு சிற்றூர் உள்ளது. இந்த ஆற்றுக்கால்வாய்க்கு சித்திரமேழி ஆற்றுக்கால் என்று வந்துள்ளது. சித்திரமேழி என்றால் அலங்கரிக்கப்பட்ட ஏர்க்கலப்பை என்பது பொருள். சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்ற குழுவினர் அரியலூர் பகுதியை தலையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல இடங்களில் வேளாண் பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் வணிகம் செய்துள்ளனர்.

நீர் மேலாண்மை

விவசாயத்தைப் பெருக்கும் விதமாக பங்களாமேட்டுக்கு அருகே ஓடும் அக்ரகாரத்து ஆற்றுக் கால்வாய் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் வழியாகச் செல்லும் தண்ணீர் கரப்ப ஏரிக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரமேழி என்ற கல்வெட்டு வாசகத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அழகிய வடிவில் ஏர்க்கலப்பை ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே குத்துவிளக்கும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து வரும் நீரோடைகளை சிறு ஆற்றுக் கால்வாயாக மாற்றி அவ்வழித்தடத்தை செம்மைப்படுத்தி, கால்வாய் வழியாக ஓடிவரும் தண்ணீரை ஏரியில் சேமித்து, அந்த நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தி உள்ளனர். சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டின் வாயிலாக பண்டைய தமிழ் மக்களின் நீர் மேலாண்மைப் பற்றி தெரிந்து கொள்ள சிறந்த சான்றாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story