வேப்பனப்பள்ளி அருகே781 ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வாதராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு


வேப்பனப்பள்ளி அருகே781 ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வாதராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

வேப்பனப்பள்ளி அருகே 781 ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வாதராயர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி, ஜூலை.1-

பூர்வாதராயர் கல்வெட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் குறுநில மன்னர்களாலேயே பல ஆண்டுகளாக ஆளப்பட்டு வந்துள்ளது. அவர்களில் ஒரு பிரிவினரே பூர்வாதராயர்களாவர். இவர்களது கல்வெட்டு ஒன்று வேப்பனப்பள்ளி அருகே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

வேப்பனப்பள்ளி டாக்டர் லோகேஷ் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, சிகரமானபள்ளி காட்டில் உள்ள கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. இவை 6 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே படி எடுத்து அவற்றை வரிசைப்படுத்தி படிக்கப்பட்டது. இக்கல்வெட்டு 781 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது 1241-ம் ஆண்டில் எழுதப்பட்டது.

பாழடைந்து காணப்படுகிறது

அப்போது சோழவம்சத்தில் மூன்றாம் ராஜராஜனும், ஒய்சாள மன்னன் சோமேஸ்வரனும் இப்பகுதியை மாறி, மாறி ஆண்டனர். அதேநேரத்தில் இந்த இருவரின் தலைமையையும் ஏற்காமல் பூர்வாதராயன் அத்தியாண்டையின் மகன் தாமத்தாழ்வார் சுதந்திரமாக ஆண்டதை இக்கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவர் இந்த இருவரின் ஆட்சியாண்டுகளையும் தவிர்த்து விட்டு சக ஆண்டை குறித்துள்ளார். இக்கல்வெட்டு கங்கைகொண்டீஸ்வரம் என்ற கோவில் வழிபாடில்லாமல் பாழடைந்து இருந்ததை அறிந்த தாமத்தாழ்வார் அதை செப்பனிட்டு அன்றாட வழிபாட்டுக்கும் நிலத்தை தானமளித்ததை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு உள்ள பாறைக்கு சற்று தொலைவிலேயே இக்கோவிலும் உள்ளது. அது தற்போது மீண்டும் பாழடைந்து காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சிகரமாகனப்பள்ளி விஜி மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.


Next Story