பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு
உளுந்தூர்பேட்டையில் பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கண்டெடுத்தனர். இதுபற்றி கோ.செங்குட்டுவன் கூறுகையில், செம்மணங்கூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான அய்யனார், பூரணி பொற்கலை சிற்பங்கள் தனித்தனியே இருக்கின்றன. இது கி.பி.8-ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். அய்யனாருக்கு அருகில் 2 புறமும் பூரணி, பொற்கலை காணப்படுகின்றன. இது கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.
கீரனூர் கிராமத்தில் பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமன் மற்றும் சீதை சிற்பங்கள் காணப்படுகிறது. இது கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த அழகிய தனித்துவம் வாய்ந்த சிற்பங்கள் உளுந்தூர்பேட்டை பகுதியில் இன்றும் வழிபாட்டில் இருந்து வருகின்றன என்றார்.