அதியமான் பெருவழி கல்வெட்டு கண்டெடுப்பு


அதியமான் பெருவழி கல்வெட்டு கண்டெடுப்பு
x

திருப்பத்தூர் அருகே அதியமான் பெருவழி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

அதியமான் பெருவழி கல்வெட்டு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, ஆங்கில பேராசிரியர் வ.மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், காணிநிலம் மு.முனிசாமி, நல்லாசிரியர் சுந்தரம், பேராசிரியர் கலைச்செல்வி ஆகியோர் திருப்பத்தூர் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மேற்கொண்ட கள ஆய்வில் வணிகர்களுக்கு வழிகாட்டும் அதியமான் பெருவழி கல்வெட்டை கண்டறிந்துள்ளனனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:-

திருப்பத்தூர்-தர்மபுரி நெடுஞ்சாலையில் கொண்டப்ப நாயக்கன் பட்டியில், அதியமான் வழி வந்த அரசர்கள், அதியமான் பெருவழி கல்லை அக்காலத்தில் அமைத்துள்ளனர். பெருவழி கல்லில், அதியமான் பெருவழி நாவற் தாவளத்துக்கு காதம் 21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காதம் 21 என்பதை எண்ணால் எழுதி பின்னர் இரண்டு பெரிய வட்டக் குழிகளிட்டு, பக்கத்தில் ஒரு சிறிய வட்டக்குழியையும் இட்டுள்ளனர்.

வணிகர்கள் தங்குவதற்கு

பெருவழிகளில் செல்கின்ற வணிகர்கள், பயணிகள் இரவு நேரங்களில் தங்கவும், களைப்பை போக்கவும் அமைந்த இடம் தாவளம் ஆகும். பண்டைத் தமிழகத்தில் நாவற்தாவளம், வேம்படித்தாவளம், மஞ்சுப்புளி தாவளம், பட்டழைத் தாவளம், கடிகைத்தாவளம் ஆகிய தாவளங்கள் இருந்துள்ளன. இத்தாவளங்களில் நாவற்தாவளம் என்ற தாவளம் அதியமான்களின் ஆட்சியில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பெருவழிக்கல்லில், அதியமான் பெருவழி, நாவற் தாவளத்துக்கு காதம் 21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 13-ம் நூற்றாண்டாகும்.

பழைய காலத்தில் வழங்கி வந்த பெருவழியே இன்றைக்கு நெடுஞ்சாலை என்று வழங்கப்படுகிறது. பழைய பெருவழிகளில் இருந்த தாவளங்கள் மறைந்து இன்றைக்கு உணவகம் மற்றும் தங்கும் விடுதியாக உருவெடுத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாவளம் என்ற ஊர் இன்றைக்கும் உள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் நாவற்தாவளம் இதுவாக இருக்க வாய்ப்புள்ளது.

நடுகல்

திருப்பத்தூர் மாவட்டத்தின் வழியாக கிருஷ்ணகிரி பகுதியில் வணிகம் செய்யச் சென்ற வணிகர்களுக்கு வழிகாட்டும் விதமாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாவளம் என்பது வணிகர்கள் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்ல ஏதுவாகவும், வணிகத்தை பெருக்குவதற்காகவும் அன்றைய அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட ஊராகும். இந்த ஊர் இன்றைக்கும் வளமான ஊராக உள்ளது.

இவ்வூரில் சோழர் காலத்தை சேர்ந்த பழமையான புலியோடு சண்டையிட்டு உயிர் விட்ட வீர மறவனுக்கு எடுக்கப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் உள்ளது. எனவே இவ்வூர் வணிகத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்கிறது.

இவ்வூர் வழியாக தர்மபுரி, ராயக்கோட்டை, தளி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கும் பயணிக்க முடியும் என்பதால் பெரிய வணிக சந்தையாக இவ்வூர் விளங்கியிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story