பழங்காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் 'பண்டகக் குழி' கண்டுபிடிப்பு


பழங்காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் பண்டகக் குழி கண்டுபிடிப்பு
x

திருப்பத்தூர் அருகே பழங்காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் பண்டகக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பழங்காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் பண்டகக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டகக்குழி

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, கொரட்டி அருகே உள்ள மைக்காமேடு என்ற பகுதியில் பழங்காலப் 'பண்டகக் குழி' ஒன்றினைக் கண்டறிந்தனர்.

இது குறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது:-

திருப்பத்தூரை அடுத்த கொரட்டி அருகே அரசுக்கு சொந்தமான மைக்கா எனப்படும் கனிமம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் அமைந்துள்ளது. அதிலிருந்து 500 மீட்டர் தொலைவில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தென்னைமரம் நடுவதற்காக பொக்லைன் எந்திரத்தால் தோண்டியபோது திடீரென ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டனர். தோற்றத்தில் வித்தியாசமாக இருந்த குழி குறித்து எங்களுக்குத் தகவல் அளித்தனர்.

5 இடங்களில்

நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த குழியானது தானியக்களைச் சேமித்து வைக்கப்பயன்படும் 'பண்டகக் குழி' எனத்தெரியவந்தது. பண்டகக் குழி என்பது தானியக் கிடங்காகும். மைக்காமேடு என்ற இப்பகுதியில் 5 இடங்களில் இதுபோன்ற குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஆய்வு மேற்கொண்ட இக்குழியினைத் தவிர்த்து ஏனைய குழிகள் மூடப்பட்டு விட்டன. தற்போது கண்டறியப்பட்ட பண்டகக்குழியானது 10 அடி ஆழமும், அதன் உட்புறம் குடையப்பட்டு 13 அடி சுற்றளவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலானது 1.5 சதுர அடி அளவும் கொண்டதாக உள்ளது. வாயில் பகுதியின் சுற்றுப்புறத்தினைப் பலகைக் கற்களைக் கொண்டு அமைத்துள்ளனர். இக்குழியில் பாரம்பரிய சிறுதானியமான 'சாமை' சேமிக்கப்பட்டுள்ளது. குழியின் உள்ளிருந்து பெறப்பட்ட மண்ணில் சாமை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புடன்

விளைவித்த தானியங்களை இதனுள் கொட்டி வைத்து வாயிற் பகுதியினை புற்களைக் கொண்டு மூடி அதன் மீது கற்களை வைத்து பின் மண்ணைப்போட்டு மூடி விடுவர். அதற்கு அடையாளம் ஒன்றை வைத்துக் கொள்வார்கள். காற்றும் நீரும் உட்புக முடியாதபடி இதன் அமைப்பு இருக்கும். இயற்கையாக அமைந்த இக்குழியினுள் தானியங்களானது வெகு நாட்கள் கெடாமல் பாதுகாப்புடனும், உயிர்ப்புடனும் இருக்கும்.

இந்த அமைப்பு தமிழர்கள் கண்டறிந்த பாரம்பரிய சேமிப்புக் கிடங்காகும். தமிழர்களின் விவசாயத் திறனையும் சேமிப்பு தொழில் நுட்பத்தினையும் அறிந்துகொள்ள இதுபோன்ற தானியக்கிடங்குகள் சான்றாக அமைகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story