கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுப்பு


கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுப்பு
x

ஒடுகத்தூர் அருகே கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

வேலூர்

நடராஜர் சிலை

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றார்.

இந்தநிலையில் கடையை விரிவாக்கம் செய்வதற்காக நேற்று அவர் பொக்லைன் எந்திரம் மூலம் அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டி உள்ளார். அப்போது 5 அடி தோண்டிய நிலையில் சிலையை சுற்றியுள்ள வளையம் உடைந்த நிலையில் நடராஜர் சிலை இருந்தது.

3 அடி உயரம்

அதைத்தொடர்ந்து சிலையை பத்திரமாக எடுத்தனர். இந்த சிலை 3 அடி உயரம் கொண்டதாக இருந்தது. பள்ளம் தோண்டியபோது சிலை கண்டெடுக்கப்பட்டது காட்டு தீ போல் அந்த பகுதியில் பரவியது. இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து கோவில் முன் வைத்தனர். பிறகு சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒடுகத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜர் சிலையை பார்வையிட்டனர். பின்னர் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story