போடி அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு


போடி அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 1:00 AM IST (Updated: 8 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தேனி

போடி அருகே வடக்கு மலைப்பாதையில், வடமலை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பகுதியில் இருந்து உலக்குருட்டி வனப்பகுதிக்கு பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக அகமலைக்கு விவசாயிகள், பொதுமக்கள், கூலித்தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அகமலைக்கு செல்லும் பாதையில் முந்தல் வாய்க்கால் அருகே மல்லிங்கர்கரடு என்ற அடர்ந்த வனப்பகுதியில் கற்சிலைகள் தென்பட்டன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர், சிலைகள் கிடந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிவலிங்கம், நந்தி மற்றும் காலபைரவர் ஆகிய 3 சிலைகள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டன.

இதுகுறித்து விவசாயிகள் வரலாற்று ஆய்வாளர்களிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சிலைகள் புதையுண்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. அதில், கோவில் மண்டபம் உருவாக்கப்பட்ட வரலாற்று குறிப்புகள் இருந்தன. இதையடுத்து மண்ணில் புதையுண்ட சிலைகளை வெளியே எடுத்தனர்.

அப்போது அந்த சிலைகள் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் சிவாலயம் இருந்ததற்கான அறிகுறிகளும் தென்பட்டன. இருப்பினும் இதுதொடர்பாக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை அங்கேயே வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.


Next Story